ஒரு சிறிய பேருந்தின் அளவும், டார்பிடோ ஏவுகணை போன்ற நெறிப்படுத்தப்பட்ட உடலமைப்பும், அதிக வலிமைமிக்க தாடை ஆற்றலும் கொண்ட புலி சுறாக்கள், உலகின் மிகப்பெரிய வேட்டைச் சுறாக்களில் ஒன்றாகும்.
கடல்சார் பல்லுயிர் கண்காணிப்பு வலையமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் நீல் ஹேமர்ஷ்லாக், "இவை கடலின் 'டேங்கர்கள்' (Tanks)" என்று கூறுகிறார். மேலும், அனைத்து சுறா இனங்களையும் விட இவை மிகவும் பரந்த அளவிலான உணவை உட்கொள்வதால், "கடலின் குப்பைத் தொட்டிகள்" என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை மெல்லுடலிகள், ஸ்டிங்ரே மீன்கள், கடல் பாம்புகள், சீல் உயிரினங்கள், கணவாய்கள் மற்றும் திமிங்கலங்களை விரும்பிச் சாப்பிடுகின்றன. கடல் பறவைகள் மற்றும் நில வாழ் விலங்குகளையும் இவை விட்டுவைப்பதில்லை.
பெருச்சாளிகள், மான்கள், நாய்கள், ஆடுகள் மற்றும் பூனைகள் கூட இவற்றின் வயிற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மிகவும் கூர்மையான முட்களைக் கொண்ட 'எக்கிட்னா' (echidna) என்ற உயிரினத்தை ஒரு சுறா வாந்தி எடுத்தது. ஒருவேளை அதன் முட்கள் சுறாவின் தொண்டையை உறுத்தியிருக்கலாம்.
மனிதர்கள் போடும் குப்பைகளும் இவற்றின் உணவுப் பட்டியலில் அடங்கும்: சிப்ஸ் பாக்கெட்டுகள், ஆணுறைகள், சிகரெட்டுகள், வாகனப் பதிவு தகடுகள், டயர்கள், டிவிக்கள் - ஏன், முழுமையான ஒரு இரும்புக்கவச ஆடை கூட இவற்றின் வயிற்றில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல், மனிதர்களும் இவற்றின் பட்டியலில் உள்ளனர். வெள்ளைச் சுறா (Great White) மற்றும் காளைச் சுறாக்களுடன் (Bull Shark) சேர்த்து, புலி சுறாக்களும் உலகின் மிக ஆபத்தான "மூன்று பெரிய" சுறா இனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
ஆனால், நீங்கள் ஒரு சுறாவால் தாக்கப்படுவதை விட, கடலலை இழுத்துச் செல்லப்படுவதாலோ அல்லது மின்னல் தாக்குதலாலோ பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
